பெங்களூரு, நவ. 25-
மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் நிர்ணயிக்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை வலியுறுத்தி, ஆஷா பணியாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டம் 9-வது நாளை எட்டியுள்ளது.
பெங்களூரு சுதந்திர பூங்காவில் (ஃப்ரீடம் பார்க்) கடும் குளிர், காற்று மற்றும் மழை பெய்தபோதிலும் போராட்டம் நிற்கவில்லை. இரவு பகலாகச் சாலையில் அமர்ந்து போராடி வரும் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இடத்தை விட்டு நகரப் போவதில்லை என உறுதியாக உள்ளனர்.
பெங்களூருவில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் போராட்டக் களத்தில் கடும் குளிர் நிலவுகிறது. எலும்பைத் துளைக்கும் குளிர், மழை மற்றும் காற்றையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆஷா பணியாளர்கள் இந்தத் தர்ணாவில் பங்கேற்றுள்ளனர். மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்து வந்துள்ள பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுக்கு எதிராகக் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வீடியோ கால் மூலம் அளித்த வாக்குறுதியை ஏற்க மறுத்த ஆஷா பணியாளர்கள், வெறும் வாய்மொழி வாக்குறுதிகள் தங்களது பிரச்சினைக்குத் தீர்வாகாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.