அனுராதா, விகாஸ் சின்ஹா தம்பதியின் இந்த உயரிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அப்பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பகுப்பாய்வு கல்லூரிக்கு இத்தம்பதியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. - படம்: ரெடிஃப்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளித் தம்பதியர் 20 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அனுராதா, விகாஸ் சின்ஹா தம்பதியின் இந்த உயரிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அப்பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரிக்கு இத்தம்பதியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற இருவரும், பின்னர் அமெரிக்கா சென்று உயர்கல்வியைத் தொடர்ந்தனர்.
பிராட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றும் விகாஸ் சின்ஹா, 2023ல் முனைவர் பட்டம் பெற்றார். ஏற்கெனவே 2024, 2025ஆம் ஆண்டுகளில் தரவு அறிவியல் துறை வளர்ச்சிக்கு நன்கொடைகளை வழங்கிய இவர்கள், தற்போது மீண்டும் ஒரு பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
“கல்விதான் எங்கள் வாழ்வின் கதவுகளைத் திறந்தது. புலம்பெயர்ந்தோராகிய நாங்கள் அமெரிக்கக் கனவில் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், அதை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறோம் என்பதை நிரூபிக்கவே இந்த நிதியுதவி,” என்கிறார் விகாஸ் சின்ஹா.
இந்த நிதியானது பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்தொகை, பேராசிரியர்களுக்கான ஆய்வுக் குழுக்கள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையங்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனங்களை அமைக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹாரிசன் கெல்லர் இத்தம்பதியின் கொடை உள்ளத்தைப் பாராட்டி, இவர்களின் இந்த பங்களிப்பு எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளார்.
.png)





English (US) ·