துணைப் பிரதமர் கான் கிம் யோங். - படம்: சாவ்பாவ்
அமெரிக்கா விதித்த வரிகளைக் குறைக்க தொடர்ந்து அந்நாட்டை சிங்கப்பூர் தொடர்புகொள்ளும் என்றும் நிலைமையைக் கையாள வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும் என்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
அதேவேளை, அதன் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை அடுத்து எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் கவனமாக ஆலோசிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
12.5 விழுக்காடு வரி
ஆண்டுதோறும் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில், 9.5 பில்லியன் வெள்ளி மதிப்பிலான மூன்றில் ஒரு பங்குமீது கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி 12.5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. 10 அல்லது 12.5 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட பல நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.
ஊழியர்களை வலுக்கட்டாயமாக வேலை வாங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அந்த வரிவிதிப்பு இடம்பெற்றது.
வலுக்காட்டாயமாக ஊழியர்கள் வேலை வாங்கப்பட்டப் பொருள்களின் வர்த்தகத்தில் சிங்கப்பூர் ஈடுபட்டதாக ஆதாரம் ஏதும் இல்லை என்று துணைப் பிரதமர் கான் தெரிவித்தார். எனினும், வலுக்கட்டாயமாக வேலை வாங்கப்படும் போக்குடன் சம்பந்தப்பட்டப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க சட்டம் இல்லாததால் அதிக விகிதத்தில் வரி விதிக்கப்பட்டதாகத் திரு கான் விவரித்தார்.
$2.5 டிரில்லியன் வர்த்தகம்
முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் சிங்கப்பூர் ஆண்டுதோறும் 2.5 டிரில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருள்களையும் சேவைகளையும் கையாள்கிறது. அதில் 1.4 டிரில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருள் வர்த்தகமும் அடங்கும்.
இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அவை சிங்கப்பூரின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் திரு கான். ஆவணங்களைத் தயார்செய்வது, விசாரணை போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் வர்த்தகங்கள் அதிகச் செலவை எதிர்நோக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக சிங்கப்பூருக்கு அப்பால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இடம்பெறும் உற்பத்திக்கு இது பொருந்தும் என்று அவர் சொன்னார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
“அத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்ற பங்காளிகளுடனான நமது வர்த்தகரீதியான உறவையும் பாதிக்கக்கூடும்,” என்று வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் விளக்கினார்.
பேச்சுவார்த்தை, ஆலோசனை
சிங்கப்பூர்ப் பொருளியல் மீட்சிப் பணிக்குழு மூலம் அரசாங்கம் தொடர்ந்து வர்த்தகங்களுடனும் ஊழியர்களுடனும் பேச்சுவார்த்தையைத் தொடரும் என்று அவர் தெரிவித்தார். வரிகளைக் குறைக்க அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்ததாக அவர் சொன்னார்.
எனினும், அதுபோன்ற ஒப்பந்தங்களில், மற்ற பொருளியல்களுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களை வைத்துப் பார்க்கும்போது மற்ற நாடுகள் தொடர்பான கட்டுப்பாடுகள் போன்ற மற்ற அம்சங்களும் சேர்க்கப்படவேண்டியிருக்கலாம்.
“அவ்வாறு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை ஆராய்ந்த பிறகே சிங்கப்பூரால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியும்,” என்றார் அவர்.
.png)





English (US) ·