அமைச்சர்கள் சம்பள உயர்வு: உணர்வுபூர்வ அணுகுமுறை முக்கியம்

14 hours ago 1

39b03667-777b-4632-abc9-17494f0b6fb3

அமைச்சர்கள் சம்பள உயர்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதித்தனர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அமைச்சர்களின் ஊதியக் கட்டமைப்பு, தேசிய போனஸ் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தேசிய ஊக்கத்தொகையில் ‘வாழ்க்கைமுறைக் குறியீட்டைச்’ சேர்ப்பது சமூக முன்னேற்றத்தை அளவிட உதவும் என நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் பூன் கூறினார்.

அமைச்சர்களின் உயர் சம்பளத்திற்கான காரணங்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அரசு உணர்வுபூர்வமாக விளக்க வேண்டும் என நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டெரன்ஸ் ஹோ கூறினார். அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே மதிப்புமிக்க திறமையாளர்கள் என்ற பிம்பத்தை அரசாங்கம் உருவாக்கிவிடக் கூடாது என்றார் அவர். அரசியலுக்கு வர விரும்பும் மூன்று தரப்பினரில், கணிசமான சம்பளக் குறைப்பைச் சந்திப்போருக்கு நிதியளிப்பில் இடைக்கால ஏற்பாடுகளைச் செய்யலாமென அவர் யோசனை தெரிவித்தார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அஸாத் ஒத்மான், அமைச்சர்களின் ஊதியத்தில் நிலையான பகுதியை 45 விழுக்காடாகவும், மாறுபடும் பகுதியை 55 விழுக்காடாகவும் மாற்ற யோசனை அளித்தார்.

பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் பரிந்துரையை ஆதரிப்பதாகச் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபார் தெரிவித்தார்.

முன்னணி 1,000 பேரின் ஊதியத்திற்குப் பதிலாக, சமமான பொறுப்புள்ள பதவிகளை ஒப்பீடாகக் கொள்ள நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் கோ பரிந்துரைத்தார். தமது சம்பள உயர்வை நன்கொடையாக வழங்கப் பிரதமர் வோங் எடுத்துள்ள முடிவைப் பாராட்டிய அவர், இச்சம்பள உயர்வு தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்கன்று, திறமையானவர்களைச் சேவைக்கு ஈர்ப்பதற்கே என்ற தெளிவான செய்தியை அது உணர்த்துவதாகக் கூறினார்.

அரசாங்கம் தனது இலக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு சுட்டிக்காட்டினார். வாழ்க்கை முறைக் குறியீடு எப்போது வெளியிடப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய ஊதிய முறை அமைச்சர்களின் நடுநிலைமையை உறுதிசெய்வதாகவும், உதவியாளர்களின் சம்பளம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோஃபர் டி சூசா கூறினார்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட திறமையாளர்களை அரசியல் சேவைக்கு ஈர்க்கும் வகையில் விவாதம் அமைய வேண்டும் என நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டெரன்ஸ் ஹோ வலியுறுத்தினார்.

Read Entire Article