எட்டோமிடேட் போதையில் கார் ஓட்டிய ஆடவருக்குச் சிறைத்தண்டனை

46 minutes ago 1

எட்டோமிடேட் போதையில் போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட கோ சீ சியோங், 35, என்பவருக்கு 11 மாதச் சிறைத்தண்டனையும் நான்கு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

2025 நவம்பர் 26ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் அவர் எட்டோமிடேட் கலந்த ‘கேபாட்’ மின்சிகரெட்டைப் புகைத்தார். பின்னர், சுவா சூ காங் வே சாலையில் போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் காரை ஓட்டிச் சென்று பெட்ரோல் நிலையத்திற்குள் திரும்பினார். பிற வாகனங்கள் வேகத்தைக் குறைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது; சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

போதையில் இருந்த அவரிடம் மின்சிகரெட்டும், ரத்த மாதிரியில் எட்டோமிடேட்டும் கண்டறியப்பட்டன. நுரையீரலைப் பாதிக்கும் இப்பொருள் தசைப்பிடிப்பு, மூச்சுத்திணறல், வலிப்பு, மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் புகைத்த குற்றத்திற்கு முதல்முறை $2,000 முதல் $10,000 வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் மறுமுறை $5,000 முதல் $20,000 வரையிலான அபராதமும் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

2023 முதல் 2025 வரை போதைப்பொருள், எட்டோமிடேட் தொடர்பில் 38 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. இவற்றில் 19 போதைப்பொருள் உட்கொண்டதாலும், 12 எட்டோமிடேட் பயன்படுத்தியதாலும் ஏற்பட்டன. ஏழு விபத்துகள் இவ்விரண்டையும் பயன்படுத்தியதால் ஏற்பட்டன.

Read Entire Article