கடையநல்லூர் தமிழ் முஸ்லிம் சமூகத்தை சித்திரிக்கும் ‘ஹபீபி’ திரைப்படம்

1 hour ago 1

38342349-8e9d-435d-b1cc-cd3d68b18693

ஹபீபி திரைப்படப் பாராட்டு நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் மீரா கதிரவன் (நடுவில்), நடிகர் கஸ்தூரி ராஜா (இடமிருந்து ஐந்தாமவர்). - படம்: ஆயிஷா ரோஸ்

கடையநல்லூர் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு ‘ஹபீபி’ என்ற தமிழ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில், எழுத்தாளர் வ.செ. முகம்மது அமீன் எழுதிய கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்குச் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

அபுதாஹிர் என்ற இந்திய முஸ்லிம் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை இத்திரைப்படம் விரிவாக சித்திரிக்கிறது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நிஜக் கதாபாத்திரங்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படத்தில் அபுதாஹிரின் தந்தை முகம்மது யூசுஃப் கதாபாத்திரத்தில் பிரபலத் திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா நடித்துள்ளார். இதன்மூலம் இவர் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியுள்ளார். இத்திரைப்படம் வடிவம் பெற ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இத்திரைப்படத்திற்கான பாராட்டு விழா இம்மாதம் செப்டம்பர் 4ஆம் தேதி ஜாமியா இஸ்லாமிய மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 6ஆம் தேதி கோல்டன் மைல் டவரில் உள்ள கார்னிவல் திரையரங்கில் ‘ஹபீபி’ திரையிடப்பட்டது. இந்தச் சிறப்புத் திரையிட்டு விழாவில் நடிகர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் மீரா கதிரவன் இருவரும் கலந்துகொண்டு பேசினர்.

ஹபீபி திரைப்படப் பாராட்டு நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் மீரா கதிரவன் (நடுவில்).

ஹபீபி திரைப்படப் பாராட்டு நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் மீரா கதிரவன் (நடுவில்). - படம்: ஆயிஷா ரோஸ்

“இத்திரைப்படத்தில் ஓர் இஸ்லாமியராக நடித்தபோது, நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் சமயத்தைப் பார்க்கவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் எப்படி ஒரு பொறுப்பும் அன்பும் நிறைந்த தந்தையாக இருக்கிறேனோ, அதைபோலவே இந்தத் தந்தை கதாபாத்திரத்தையும் உணர்ந்து நடித்தேன். இக்கதாபாத்திரம் வெளிப்படுத்தும் பண்புகளில், என் நிஜத் தந்தையின் குணநலன்களையே நான் பிரதிபலித்துள்ளேன்,” என்று இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பகிர்ந்துகொண்டார்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நசீர் கனி, இந்தியத் தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சித்திரிக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தை சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சமூகத்திற்குத் திரையிட்டு, இப்படத்துக்கான பாராட்டு விழாவை நடத்த விரும்பினார்.

இதற்கு ஜாமியா சிங்கப்பூர், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை, நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம், பிஸ்மி ரேடியோ ஆகிய நான்கு அமைப்புகளும் இணைந்துப் பணியாற்றின. மேலும், மற்ற ஆதரவாளர்களும் பெரிதும் உறுதுணையாக இருந்தனர் என்றார் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் முஹம்மது பிலால், 57.

“இந்தத் திரைப்படம் இளைஞர்களுக்குத் தமிழ் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை வழங்குகிறது. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளும் நிறைந்திருக்கும் இக்காலத்தில், இந்திய முஸ்லிம் சமூகத்தைத் திரைப்பட வடிவில் சித்திரிப்பது, அச்சமூகத்தைப் பற்றிய ஒரு சரியான புரிதலைப் பார்வையாளர்களுக்குத் தருகிறது,” என்று கூறினார் ஜாமியா சிங்கப்பூரின் சமய நல்லிணக்க மூத்த ஆலோசகர் டாக்டர் முஹம்மது சலிம், 77.

ஹபீபி சிறப்புத் திரையிட்டு விழாவில் இந்திய முஸ்லிம் சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்படத்தை கண்டு மகிழ்ந்த பார்வையாளர்களில் ஒருவர் தமிழ் ஆசிரியை மும்தாஜ் பீவி, 61.

“நான் ஹபீபி திரைப்படத்தைப் பார்த்தபோது, சிறு வயதில் என் பெற்றோர் என்னை இந்தியாவுக்கு அழைத்துச் சென்ற நினைவுகள் வந்தன. இந்தியாவில் மாட்டு வண்டி மூலம் ஊருக்குச் சென்றது, கடையநல்லூரில் உள்ள இடங்களை இந்தப் படத்தில் காண்பித்தது எல்லாம் மறக்க முடியாத நினைவுகளைத் தூண்டின,” என்று கூறினார் திருவாட்டி மும்தாஜ் பீவி.

Read Entire Article