சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நாளில், சிங்கப்பூரில் இரண்டாவது நீதிச் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நாட்டின் சட்டக் கட்டமைப்புக்கு முக்கியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
அவ்வகையில், சிங்கப்பூரின் நவீனச் சட்டக் கட்டமைப்பின் அடிநாதமாகத் திகழும் இரண்டாவது நீதிச் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) காலை உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்வு நடைபெற்றது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் வழிநடத்திய அந்த அமர்வில் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங் சிறப்புரையாற்றினார்.
‘’நீதித்துறையின் சாதனைகள், இயற்றப்பட்ட சட்டங்களாலோ கட்டியெழுப்பிய நிறுவனங்களாலோ மேற்கொண்ட சீர்திருத்தங்களாலோ மட்டுமே அளவிடப்படப் போவதில்லை;
“மாறாக, அதன்வழி மக்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்திய மாற்றங்களாலும் நிலைநிறுத்திய நம்பிக்கையாலும் வருங்காலத் தலைமுறையினருக்கு அமைத்துக் கொடுத்த எதிர்காலத்தாலுமே அளவிடப்படும்,” என அவர் தெரிவித்தார்.
சேவை செய்ய வேண்டியது மக்களுக்குத்தான் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்ற அமைச்சர், “சிங்கப்பூரில் உலக அளவில் மதிக்கப்படும் நீதிமன்றங்களும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களும் உள்ளனர். ஆனால் நமது வெற்றி, சட்டத்தை நம்பியிருக்கும் மக்களுக்கு அது எவ்வளவு நன்றாகச் சேவை செய்கிறது என்பதை வைத்துத்தான் அளக்கப்பட வேண்டும்”, என்றார்.
மேலும் நாட்டில், ‘‘தனிமனிதர் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் மதிப்புக் கொடுக்கிறோம். எனினும் சட்டத்தின் ஆட்சி என்பது எப்போதும் தனிநபர் உரிமைகளைவிட ஒட்டுமொத்தச் சமூக நலனுக்கே அதிக மதிப்பளிக்கிறது,’’ என்று திரு டோங் கூறினார்.
பேச்சுரிமை என்பது முக்கியமானதாக இருந்தாலும், அது எல்லையற்றதன்று; இனம் அல்லது சமயத்துக்கு ஊறுவிளைவிக்கும் வெறுப்புப் பேச்சுகளுக்கும் தூண்டுதல்களுக்கும் எதிராகக் கடுமையான சட்ட வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டினார்.
பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன, சமய வெறுப்புணர்வால் சமூகங்கள் அச்சத்திலும் பிளவிலும் ஆழ்ந்திருப்பதைச் உரையின்போது அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் அருகருகே அமைந்திருப்பதும், மக்கள் ஒற்றுமையாக வாழ்வதும் சாதாரணமான ஒன்றன்று; அதனைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் எனவும் சட்ட அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்பு, சிக்கலான அனைத்துலக வணிகப் பரிவர்த்தனைகளைக் கையாளும் திறன் கொண்டுள்ளது; அதே வேளையில், அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சாமான்ய சிங்கப்பூரருக்கும் தேவையற்ற செலவும் சிக்கலுமின்றி உடனடித் தீர்வு கிடைக்கும் வகையில் சட்ட உதவித் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் வழக்குத் தீர்வுகளை எளிமைப்படுத்துவதிலும் சட்ட அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் திரு டோங் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, மூப்படையும் மக்கள் தொகை, அனைத்துலக அளவில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை சிங்கப்பூரின் திறனுக்கு சவால் அளிக்கும் என்ற அமைச்சர், சிங்கப்பூரைப் போன்ற ஒரு சிறிய நாடு, ‘வலிமையே வெல்லும்’ என்ற நிலைக்குப் பதிலாக, ‘விதிமுறைகளால் ஆளப்படும் உலகம்’ என்பதை இன்றியமையாத தேவையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் எதிர்காலத் தலைமுறையினர், நமது தலைமுறையைப் பெருமையுடன் நினைவுகூரும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் எட்வின் டோங் கேட்டுக்கொண்டார்.
.png)




English (US) ·