சிறையிலிருந்து கஞ்சா கடத்தல்; நால்வர் கைது

1 hour ago 1

சென்னை: புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியும் அவரது மனைவியும் சிறையிலிருந்தபடியே கஞ்சா கடத்தும் கும்பலை இயக்கி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரளாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கிட்டத்தட்ட 85 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், பெரும்பாக்கத்தில் நள்ளிரவில் நடத்திய சோதனையில் நால்வரைக் கைது செய்தனர்.

கைதானவர்கள் சரண்ராஜ் (21), ஹேமத்குமார் (32), கௌதம் (21), சேசுராஜ் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றப் பின்னணி கொண்ட செந்தில்குமார் என்ற குள்ளக்கண்ட செந்திலும், அவரது மனைவி கலைவாணி என்ற கலையும் புழல் மத்தியச் சிறையில் உள்ளனர்.

விசாரணையில், சரண்ராஜ் உள்ளிட்டோர் கடந்த வியாழக்கிழமை சிறையில் தம்பதியைச் சந்தித்தது தெரியவந்தது. வரும் கஞ்சா பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைத்து பணத்தை வசூலிக்குமாறு செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, பெரும்பாக்கம் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) குடியிருப்புப் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சிறப்புக் காவற்படை நள்ளிரவில் நடத்திய சோதனையில், 40 பொதிகளில் இருந்த கிட்டத்தட்ட 85 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து நால்வரைக் கைது செய்தது. செவ்வாய்க்கிழமை விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த இப்பொருள்கள், செந்தில்குமாரின் அறிவுறுத்தலின்பேரில் கேரளாவிலிருந்து வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மொத்தமாகக் கஞ்சா விநியோகிக்கும் மையமாகப் பெரும்பாக்கம் செயல்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Entire Article