திருப்பரங்குன்றம் கல் தூணில் இன்று தீபம்: மலை முழுவதும் சிஆர்பிஎப் வீரர்கள் வசம்!

17 hours ago 2

இந்த வழக்கு நீதிபதிகள் அரவிந்த், விபுல் எம்.பஞ்சோலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான பொறுப்பு ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டபோதும், அறங்காவலர் குழுவானது புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக்கூறி தனது பொறுப்பை ஆட்சியர் தட்டிக்கழித்துள்ளதாக வாதிட்டனர்.

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தயாராக இருந்தபோதிலும், கல் தூணை ஆய்வு செய்ய தங்களை தமிழ்நாடு காவல் துறை அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த மதுரை ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்தற்கு ஆதாரம் உள்ளது என்றும் தூணுக்கு செல்ல தடுத்ததாக மத்திய தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கை தவறு எனவும் வாதிட்டார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவேன் என்றுதான் கூறினேன் தவிர, தீபம் ஏற்றுவது தனது பணி கிடையாது என்றும் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவை பிறப்பித்தனர். நவம்பர் 20 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தாமல் இருந்தது கடுமையான வேதனையை கொடுப்பதாகவும் தற்போதைய சூழலைப் பார்க்கும் போது, தாங்கள் முதலில் சொல்ல விரும்பும் வார்த்தை "ஐயோ" என்பதுதான் எனக் கூறினர்.

இது போன்ற சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதுமாகக் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த மதுரை ஆட்சியர் முயற்சித்துள்ளார் என்றும் கூறினர். கோயில் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் கோயில் நிர்வாக குழுவை அமைப்பதாக தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் இன்று கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்றும் கடந்த 24ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் கோயிலில் எந்த ஏற்றப்பட்ட அந்த தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துக் கொண்டு கல் தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் எனவும் கூறினர். மேலும், திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு பக்தரும் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மலை முழுவதும் சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், சட்டம் - ஒழுங்கு அமைதியை சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள்,

சிக்கந்தர் தர்காவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அங்கு தொழுகை நடத்துவதற்கு எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆணையிட்டனர். இதனிடையே, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தலைமைச் செயலாளர் சாய் குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், அறநிலையத்துறை செயலாளர் ராஜாராம், அறநிலையத்துறை ஆணையர் வினய், மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை எஸ்.பி. தேவநாதன், கோவில் செயல் அலுவலர் செல்வி, அறங்காவலர்கள் ராஜபாண்டியன், அழகப்பன், ரெஜினா தேவி, சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் டிசம்பர் 15ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, அன்றைய தினம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read Entire Article