செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பொருள்களைப் பரிந்துரைப்பது மட்டுமன்றி, பயனர்களுக்காக அவற்றை வாங்கும் பணிகளையும் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்
பயனர்கள் சார்பாகப் பொருள்களை வாங்கும் செயற்கை நுண்ணறிவு முகவர்களை (AI agent) அடையாளம் கண்டு சரிபார்க்கப் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆன்ட் இன்டர்நேஷனல், மாஸ்டர்கார்டு, விசா ஆகிய கட்டணச் சேவை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பொருள்களைப் பரிந்துரைப்பது மட்டுமன்றி, பயனர்களுக்காக அவற்றை வாங்கும் பணிகளையும் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதைக் கருத்தில்கொண்டு, இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பாதுகாப்பு விதிமீறல்கள், மோசடிகள் ஏற்படக்கூடும் என்பதால் புதிய கட்டமைப்பு நிறுவனங்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.
நம்பகமான செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் பல்வேறு கட்டணத் தளங்கள் எளிதாக அங்கீகரிக்க இந்தக் கட்டமைப்பு உதவும்.
அதேவேளையில், மின்னிலக்கத் தளங்கள் தங்களுடைய சொந்தப் பாதுகாப்பு நடைமுறைகளையும் தொடர்ந்து பின்பற்ற இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
புதிய கட்டமைப்பானது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளின் அடிப்படையில் தற்பொழுது உருவாக்கப்படுகிறது.
இதனால் ஒருங்கிணைப்புச் செலவுகள் கணிசமாகக் குறையும் என்று இந்த நிறுவனங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
மேலும், பாதுகாப்பான புதிய சேவைகளை விரைவாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும் இது பெரிதும் வழிவகுக்கும்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தளத்தின் மூலம் இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து செயல்படவுள்ளன.
இந்தத் தளம் நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை ஒரே குடையின்கீழ் ஒன்றிணைக்கிறது.
இதன் மூலம் பாதுகாப்பான நிதிச் சேவைகளுக்கான சிறந்த தொழில்நுட்பத் தீர்வுகளை எளிதாக உருவாக்க முடியும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
.png)





English (US) ·