கண்ணூர், நவ. 26-
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.வி.தன்ராஜ் கொலை வழக்கில், பாஜக–ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் விடுவிக்கப்பட்டனர். கண்ணூர் மாவட்டம் எழிமலா பிரிவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலராக சி.வி.தன்ராஜ் பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, அவர் பையனூரிலிருந்து ராமந்தளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், தன்ராஜை வழிமறித்து தாக்கி கொலை செய்தது. இதுதொடர்பாக கண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 20 பாஜக–ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12-வது நபராக இடம்பெற்றிருந்த சி.பிஜு என்பவர் பின்னர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மீதமிருந்த 19 பேர் மீது போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.