சென்னை: செப்.10-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை சூழல் உருவாகி வந்துள்ளது. இதனால் வெப்பம் குறைந்து, தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலை மாற்றமடைந்துள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கதேசம் பகுதியில் தாழ்வுப்பகுதி உருவாகி, இன்று காலை 5.30 மணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதன் அருகில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டுக்கு இதனால் நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை சூழல் காரணமாக வெப்பம் குறைந்து, மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர்.