“வாய்திறக்காமல் இருங்க ப்ளீஸ்...”
சீனியர்களை விளாசிய தி.மு.க தலைமை!
“கொளத்தூர் தொகுதியில் த.வெ.க எம்.எல்.ஏ வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகியிருப்பது, கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. ‘இதுபோன்ற வழக்குகளெல்லாம் நிற்காது என்று தெரிந்திருந்தும் தலைவர் பெயரிலேயே இப்படியொரு சோதனை முயற்சியை மேற்கொண்டு, மீண்டும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளது கட்சியின் சட்டத்துறை’ என்று உடன்பிறப்புகள் கொதித்துவிட்டார்களாம்.
‘கொளத்தூர் தோல்வியைச் சரிக்கட்டுவதாக நினைத்துக்கொண்டு இனி நீங்கள் எதுவும் செய்யவேண்டாம்’ என கட்சியின் சட்டத்துறை உச்சப்புள்ளியிடமும் அந்த முன்னாள் மாண்புமிகுவையும் கடுமையாக எச்சரித்தார்களாம் குடும்ப புள்ளிகள்.

திமுக தலைவர் ஸ்டாலின்
மறுபக்கம், ‘நீங்கள் பேசினாலே சர்ச்சையாகிவிடுகிறது. எனவே தலைமை சொல்லாமல் வாய்திறக்க வேண்டாம்’ என மகாகவி புள்ளிக்கு டோஸ் விழுந்ததாம். கடுப்பான மகாகவி பிரமுகர், ‘உங்களுக்கெல்லாம் பேசச் சொல்லிக் கொடுத்ததே நான்தான்’ என முணுமுணுத்துபடி வருந்தினாராம்!
காற்றில் பறந்த தேர்தல் வாக்குறுதிகள்...
முதல்வர்மீது காக்கிகள் கோபம்!
காவல்துறை மானியக் கோரிக்கையில், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்பது போலாகிவிட்டது முதல்வரின் பதிலுரை. எதிர்க்கட்சிகளை ட்ரிக்கர் செய்து, தி.மு.க-வினரை கொந்தளிக்க வைப்பதில் கவனம் செலுத்திய முதல்வர் விஜய், காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டாராம்.
த.வெ.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, உடை சலவை மானியம், உணவுப்படி, அடிப்படை ஊதியம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படுமென நம்பியிருந்தனர் காவலர்கள். அதுகுறித்த எந்த அறிவிப்பும் வராததால், காக்கிகள் டோட்டல் அப்செட்.

‘காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் 80 சதவிதத்துக்கு மேல் த.வெ.க-வுக்குத்தான் வாக்களித்தனர். அதனால்தான், தபால் வாக்குகளில் கணிசமான எண்ணிக்கையை த.வெ.க பெற்றது. முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றுதானே ஓட்டு போட்டோம்... இப்படி கைகழுவினால் என்ன நியாயம்?’ என்று கொதிக்கிறார்கள் காக்கிகள்.
இதுபோக 8 மணி நேர வேலையை முறைப்படுத்துவது, காவலர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை என எந்த முன்னெடுப்பும் இல்லாததால், காக்கிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது.
“வாரியப் பொறுப்பு எங்களுக்கு வேண்டாம்...”
கொந்தளித்த திருமா!
த.வெ.க ஆட்சிக்கு ஆதரவளித்து, அமைச்சரவையிலும் பங்கேற்றிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இருதரப்புக்கு இடையேயான உடன்படிக்கைகளின்படி, ஒரு வாரியத் தலைவர் பொறுப்பு தருவதாக வாக்குறுதி அளித்தது த.வெ.க அரசு. சமீபத்தில், தாட்கோ வாரியத் தலைவர் பொறுப்புக்கு ஆட்களை நியமித்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது த.வெ.க அரசு. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருவரை நியமிக்கச் சொல்ல, அமைச்சர் வன்னி அரசு வேறு ஒருவரைக் கைக்காட்ட... தலைவர் என்கிற முறையில் சிந்தனை செல்வனை தேர்வுசெய்திருக்கிறார் திருமா. எதுவும் கைகூடவில்லை.

சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்
இறுதியில், ‘எங்கள் கட்சியையே வாரியத் தலைவர் பொறுப்பு சீர்குலைத்துவிடும். எனவே, வாரியத் தலைவர் பொறுப்பே எங்களுக்கு வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறாராம் திருமா. அதன் எதிரொலியாகத்தான், சமூக வலைதளங்களில் த.வெ.க - வி.சி.க-வுக்கு எதிராக மறைமுகமாக விமர்சித்துவருகிறாராம் சிந்தனைச்செல்வன். தலைவரின் இந்த முடிவால் கடும் அப்செட்டான வன்னி அரசு, ‘அவர்கள் 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ-க்களாக இருந்தார்களே... போதாதா..’ என சகாக்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.
“இடைத்தேர்தல் ஆதரவு யாருக்கு?”
கேம் சேஞ்சர் பா.ம.க!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிராக்கி அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க தரப்பில் நடத்தப்பட்ட சர்வேயில், ‘பா.ம.க கூட்டணி வைக்கும் கட்சிதான் மதுராந்தகத்தில் வெல்லும்’ என தெரியவந்திருப்பதால், படு குஷியில் இருக்கிறார்கள் பா.ம.க தலைவர்கள்.
தி.மு.க தரப்பிலிருந்து, ‘எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்’ என்றும், ‘எங்கள் கூட்டணியிலேயே தொடர்ந்திடுங்கள்’ என அ.தி.மு.க-வும் அழுத்துகிறதாம். அன்புமணி வெளியூரில் இருப்பதால் அவர் ஊர் திரும்பியதும் இரு தரப்பும் முட்டிமோதி அவரிடம் ஆதரவு கேட்க திட்டமிடுகிறார்கள்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணியுடன் பேசி பா.ம.க-வைக் கூட்டணிக்கு கொண்டுவரும் பொறுப்பை, தி.மு.க-வின் மேலிடத்து மாப்பிள்ளை பிரமுகர் ஏற்றிருக்கிறாராம்.
‘பல ஆண்டுகள் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு மத்திய மாண்புமிகு பொறுப்பையும் தரவில்லை’ என தாஜா செய்துவருகிறதாம் மாப்பிள்ளை டீம். ‘உடனடியாக முடிவெடுப்பது எங்கள் கட்சியின் வழக்கமல்ல... யோசித்துச் சொல்கிறோம்’ என பிடி கொடுக்காமலேயே இருக்கிறதாம் பா.ம.க. இதற்கிடையில், ஆளும் தரப்பு ஏதும் காய்நகர்த்துகிறதா என்று உன்னிப்பாகக் கவனிக்கிறார்களாம் இருபெரும் திராவிடக் கட்சியினர்.
“நான் மாண்புமிகுவாகப் போகிறேன்...”
வசூலில் இறங்கிய த.வெ.க எம்.எல்.ஏ!
தென்மாவட்டத்திலுள்ள ‘திரு’ தொகுதியின் எம்.எல்.ஏ சொற்ப வாக்கில் வெற்றிபெற்றார். ‘தி.மு.க மாஜியை தோற்கடித்திருக்கிறோம். அமைச்சர் பதவி நமக்கு வந்து சேரும்’ என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அதே மாவட்டத்தைச் சார்ந்த மருத்துவ பிரமுகருக்கு அமைச்சர் பதவி சென்றுவிட்டது.
அதனை சகித்துக்கொள்ள முடியாத எம்.எல்.ஏ., ‘மாண்புமிகு பொறுப்பையும் கொடுத்ததோடு வளமான துறையையும் கொடுத்திருக்கிறீர்கள். அவர் இரண்டு மூன்று கார்களில் வந்து செல்கிறார். இவற்றையெல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா..!’ என்று கட்சித் தலைமையிடம் மன்றாடியிருக்கிறார். மாண்புமிகுக்கள் மாற்றத்தில், தனக்கு லக் இல்லையென ஸ்மெல் செய்த எம்.எல்.ஏ., ‘நான் விரைவிலேயே மாண்புமிகு ஆகிவிடுவேன். அறிவிப்பு வரப்போகிறது.. இனி என்னை வந்து பாருங்கள்’ எனக் கூறி லோக்கல் புள்ளிகள் சிலரிடம் இனிப்புகளை கலெக்ட் செய்ய தொடங்கிவிட்டாராம்.
அவரைப் போலவே, ‘எம்.எல்.ஏ பதவியைப் பறிக்கவா முடியும்?’ என்ற தைரியத்தில் துணிந்து லட்டுகளை அள்ளிவருவதோடு ஏகப்பட்ட அட்ராசிட்டிக்களிலும் ஈடுபட்டுவருகிறார்களாம் பல எம்.எல்.ஏ-க்கள். ‘கடிவாளம் போட வேண்டியது தலைமையின் பொறுப்பு...’ என்கிறார்கள் த.வெ.க சீனியர்கள்!
.png)




English (US) ·