சாகிர் நாயக்கின் தடை செய்யப்பட்ட அமைப்புமீது மத்திய அரசு நடவடிக்கை

13 minutes ago 1

புதுடெல்லி: தலைமறைவாக உள்ள சாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளைக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அவ்வமைப்புடன் தொடர்புடைய நிதியை முடக்கவும், சொத்துகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் விரிவான அதிகாரங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 42ஆவது பிரிவின்கீழ் இவ்வதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (நவம்பர் 26) வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை மீதான ஐந்தாண்டுத் தடையை உள்துறை அமைச்சு அண்மையில் நீட்டித்த சில நாள்களில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (1967) தடுப்புச் சட்டத்தின்கீழ், அவ்வமைப்பை மத்திய அரசு கடந்த நவம்பர் 13ஆம் தேதி சட்டவிரோதமானது என்று வகைப்படுத்தி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி, அச்சட்டத்தின் ஏழாவது, எட்டாவது பிரிவுகளின்கீழ் மத்திய அரசுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் இனி மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் பயன்படுத்த முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழாவது பிரிவின்கீழ், சட்டவிரோத அமைப்புக்குச் சொந்தமான அல்லது அதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள பணம், பத்திரங்கள், கடன்களை வைத்திருப்போர் அரசாங்கத்தின் எழுத்துபூர்வ அனுமதியின்றி அவற்றைப் பயன்படுத்துவதையோ மாற்றுவதையோ தடுத்து உத்தரவு பிறப்பிக்கலாம்.

மேலும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வுசெய்து ஆவணங்களையும் நிதிப் பரிவர்த்தனைகளையும் விசாரிக்கலாம்.

எட்டாவது பிரிவின்கீழ், வீடு, கட்டடம், அதன் ஒரு பகுதி, கூடாரம் அல்லது கப்பல் ஆகியவற்றை சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்க முடியும்.

அதன்பின், மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அசையும் சொத்துகளைப் பட்டியலிட்டு, அவ்வமைப்புடன் தொடர்புடைய பொருள்களின் பயன்பாட்டைத் தடைசெய்யலாம்.

அவ்வாறு அறிக்கை வெளியிடப்படும்போது அங்கு வசிப்போர் தவிர்த்த வெளியாட்கள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியும்.

துணை ஆய்வாளர் பதவிக்குக் குறையாத காவல்துறை அதிகாரிகள் அங்கு நுழைவோரையும் உள்ளிருப்பவர்களையும் முழுமையாகச் சோதனையிடவும் காவல்துறைக்கு சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article