பொங்கோல் வட்டாரவாசிகள் ஏற்றிய தீப ஒளி

19 hours ago 1

பொங்கோல் 21 சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘குதூகல தீபாவளி 2026’ நிகழ்ச்சிக்காகக் குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடியபோது ஒற்றுமை, நல்லிணக்கம், கொண்டாட்ட மகிழ்ச்சி ஆகியவை அச்சமூக மன்றத்தில் களைகட்டின.

அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் என்ற முறையில், பொங்கோல் ஷோர் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் இயோ வான் லிங், இருளை நீக்கி ஒளி பிறப்பதைக் குறிக்கும் பாரம்பரிய மங்கல விளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். 

கைளுக்கு மருதாணி இட்டுக்கொண்ட சீன மூதாட்டி.

கைளுக்கு மருதாணி இட்டுக்கொண்ட சீன மூதாட்டி. - படம்: பொங்கோல் 21 சமூக மன்றம்

ஜிடிஏ குழுவைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் வண்ணமயமான பண்பாட்டு நடன நிகழ்ச்சிகளும் ‘வசந்தம் ஸ்டார்’ நிகழ்ச்சி புகழ் குணா, சுபாஷினி ஆகியோரின் உற்சாகமான பாடல்களும் பார்வையாளர்களை மகிழ்வித்தன. வானொலி புகழ் அப்துல் காதர் நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்பட்டார்.

குடியிருப்பாளர்கள் கலந்துரையாடல், விளையாட்டுகள், இதர நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, சிரிப்பு, உற்சாகம், சமூகப் பிணைப்பு நிறைந்த தருணங்களை உருவாக்கினர்.

பொங்கோல் 21 சமூக மன்றத்தின் தீபாவளிக் கொண்டாடத்தின் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் குடும்பங்கள்.

பொங்கோல் 21 சமூக மன்றத்தின் தீபாவளிக் கொண்டாடத்தின் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் குடும்பங்கள். - படம்: பொங்கோல் 21 சமூக மன்றம்

கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோரிடம் சமூக நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) முகப்பு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்தியப் பாரம்பரியக் கூறுகளைத் தெரிந்துகொண்டு ரசிக்கும் வாய்ப்பை இதன் வழியாகக் குடியிருப்பாளர்கள் பெற்றனர். அத்துடன், பொங்கோல் 21 சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் இளைய தொண்டூழியர்கள் வருகையாளர்களுக்கு மருதாணியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 

குத்துவிளக்கு ஏற்றும் மகளிர்.

குத்துவிளக்கு ஏற்றும் மகளிர். - படம்: பொங்கோல் 21 சமூக மன்றம்

குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து நினைவில் நிற்கும் தருணங்களைப் படங்களாகப் பதிவுசெய்ய ஏதுவாகச் செயற்கை நுண்ணறிவுப் படச்சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது.

அறுசுவை சைவ, அசைவ விருந்து, விறுவிறுப்பான விளையாட்டுகள், அதிர்ஷ்டக் குலுக்கு, அன்பளிப்புப் பைகள் ஆகியவை கொண்டாட்டத்தில் அங்கம் வகித்தன.

குடியிருப்பாளர்களுக்குப் பசுமையான நினைவுகளை வழங்கும் வகையில் இன, சமய, வயது வேறுபாடு இன்றி தீபாவளிக் கொண்டாட்டங்களில் இணைந்ததாகப் பொங்கோல் 21 சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் கௌரி சுப்பிரமணியம் கூறினார்.

“ஒருவர் மற்றவருடன் பரிமாறும் புன்சிரிப்பும் அன்புமொழிகளும்தான் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்கு அர்த்தம் சேர்க்கின்றன. எங்கள் வட்டாரவாசிகளின் உற்சாகப் பங்களிப்பால் நாங்கள் மிகுந்த ஊக்கமடைந்துள்ளோம்,” என்றார் திருவாட்டி கெளரி.

Read Entire Article