Last Updated:Sep 23, 2026 9:52 PM IST
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், மதுராந்தகம் தொகுதியில், பரந்தாமன் (திமுக), கனிதா சம்பத் (அதிமுக), மரகதம் குமரவேல் (தவெக), சுகந்தி (சிபிஎம்) மற்றும் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் தாராபுரம் தொகுதியில் சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), சத்தியபாமா (தவெக), லட்சுமணன் (சிபிஐ) மற்றும் கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுராந்தகத்தில் சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவு திரட்டி அக்கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் வாக்கு சேகரித்தார். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது; “இயற்கையாகவோ, இயல்பாகவோ இந்தத் தேர்தல் வரவில்லை. இது இந்தத் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தேர்தல். எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் அப்படியே தொடர வேண்டும் என்றால், அதனை அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதோ அரசியல் ஆதாயம் கருதிதான் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்திருக்கிறார்.
ஆனால், அவர் தற்போது பிரச்சாரத்திலும், ஊடகத்திலும் திமுக – அதிமுக இணைய முயன்றதுதான் பிரச்சனை எனச் சொல்லிவருகிறார். அதுதான் பிரச்சனை என்றால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே சுயேட்சை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் செயல்பட்டிருக்க முடியும். ஆகவே 20 நாட்களில் ராஜினாமா செய்தது என்பது பொறுப்பற்ற, எந்தவித நெறிமுறைக்கும் ஒவ்வாத செயல் அல்ல.
எனவே தற்போது தவெக சார்பில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அவரை தொகுதி மக்கள் தோற்கடிக்க வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற நபர்கள் தேர்தலில் நிற்பதும், 20 நாட்களில் ராஜினாமா செய்வதும், மீண்டும் தேர்தலில் நிற்பதற்கு ஊக்கம் அளிப்பதாக மாறிவிடும். அதேபோல், தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
.png)






English (US) ·